Song 581

வந்து வேலைசெய்

எனக்கு எனஒரு
வாழ்வைக் கொடுத்தாய்
அதற்கு எனஒரு
பாதையை வகுத்தாய்
அதற்குள்ளாக நான்
பயணமும் செய்ய
அருமையான பல
வசதிகள் தந்தாய்

தனித்து வாழத்
தைரியம் தந்தாய்
துணைக்கு எனப்பல
பக்தரைத் தந்தாய்
துன்பம் அதிகம்
தாக்கா தென்னைக்
கண்ணின் மணியெனக்
காத்தும் வந்தாய்

தேவை இதுவெனத்
தேடும் முன்னே
நீயே அறிந்து
தந்தும் வந்தாய்
குறை ஏதுமே
காணா வண்ணம்
கொடுத்து அதிகம்
நிறைத்தும் வைத்தாய்

கூப்பிட்டு உன்னைக்
கேட்கும் முன்னே
கைகட்டி நின்று
சேவகம் செய்தாய்
உன்னுடன் நானும்
உரிமையாய்ப் பழக
உனக்கும் எனக்கும்
நெருக்கம் தந்தாய்

ஊரறி யாது
நீயும் வந்து
உறவாய் எனக்கு
நீயே ஆனாய்
இதையும் உணர்ந்து
உன்னுடன் வாழும்
அருளைக் கூட
எனக்கும் தந்தாய்

இப்படி யாகநீ
எனக்குச் செய்வதை
எண்ணிப் பார்க்கும்
மனதையும் தந்தாய்
இதையே எனது
துதியாய் மாற்றி
எழுதிப் பாட
வரமும் தந்தாய்

எனக்கும் நீயும்
செய்வதை எல்லாம்
எடுத்துச் சொல்ல
விருப்பம் இருந்தும்
அதற்கு எல்லாம்
நேரமில்லாமல்
அடுத்துப் பலப்பல
வேலைகள் தந்தாய்

அதனால் நானும்
இத்துடன் முடித்தேன்
அப்புறம் மீதியைச்
சொல்லிட வருவேன்
அதுவரை நீயும்
வழக்கம் போல
என்னுடன் வந்து
வேலையும் செய்வாய்.

மத்திகிரி, 20-11-16, காலை 5.45