Tamil Song 205 – காத்திருப்பேன்

இன்னுமா உனக்கு புரியவில்லை

என்நிலை உனக்கும் விளங்கவில்லை

எப்படி நானிதை உனக்குச் சொல்வேன்

வேறெங்கு சென்று இனி முறையிடுவேன்

 

அறியாப் பிள்ளைப் பருவம் முதலே

ஐயனே என்னன்பை நீயும் அறிவாய்

மேனி உருவேறி வளர்ந்த பின்னும்

பேதையின் உள்ளமும் நீயே அறிவாய்

உன்நாமம் அன்றி வேறொன்று அறியேன்

உன்பெயர் தினமும் உச்சரித்திருந்தேன்

உன்னையே கண்ணுக்குள் பூட்டி வைத்தேன்

உன்னைச் சேரும் நாள் எதிர்பார்த்தேன்

 

மின்னலைப் போல் தோன்றி மறைந்துவிட்டாய்

மிஞ்சிய என்னன்பை மறந்துவிட்டாய்

நான் அஞ்சியபடியே செய்துவிட்டாய்

அடைக்கலம் தந்ததை மறந்துவிட்டாய்

 

ஆயினும் என்னன்பு குறைய வில்லை

அன்றுநீ சொன்னசொல் மறக்கவில்லை

காலம் வரும்வரை காத்திருப்பேன்

என்காதலை நெஞ்சிலே பூட்டிவைப்பேன்

 

கைவிட மாட்டாய் என்பதை அறிவேன்

உன்காவலை மீறிநான் செல்லமாட்டேன்

காத்திருக்கும் இந்த காலமெல்லாம்

நம் காதலை எண்ணியே வாழ்ந்திருப்பேன்

 

மத்திகிரி, 21-7-16, மதியம் 2.15