Tamil Song 242 – இத்தோடு நிறுத்தினேன்

எப்படிச் சொல்வது என்பதும் தெரியலை

எதற்காகச் சொல்கிறேன் என்பதும் புரியலை

என்மன ஓட்டத்தை எழுத்தினில் வடிக்க

எப்படி முயன்றாலும் என்னாலே முடியலை

 

தேவை இல்லாமல் தேடுறேன் எதையோ

அதுவும் தேவையா என்பதை அறியாமல்

இல்லாத தேவையை அறியாமல் தேடியே

இறுதி வரையிலும் கிடைக்காமல் வாடுறேன்

 

எல்லோரும் இதையே செய்கிறாரா என்று

எண்ணியே அவரிடம் சென்றுமே கேட்டேன்

ஏதுமே புரியலை என்றுமே சொன்னார்

என் கேள்வியே சரியில்ல என்று சொன்னார்

 

கேள்விகள் கேட்பதை நிறுத்தச் சொன்னார்

கூடவே அவருடன் உழைக்கச் சொன்னார்

அதன்பின் நேரம் இருக்கும் என்றால்

ஆராய்ச்சி பண்ணலாம் நாமும் என்றார்

 

பிறரிடம் கேட்பதில் பயனும் இல்லை

என்பதை நானுமே உணர்ந்து கொண்டு

எவரிடம் கேட்கலாம் என்று தேடி

இறுதியாய் என்னிடம் மீண்டும் வந்தேன்

 

சொல்லவே தெரியாத என்நிலையை

எப்படிச் சொன்னாலும் பயனும் இல்லை

என்பதை இறுதியில் உணர்ந்து கொண்டேன்

அதனால் இத்தோடு நிறுத்திக் கொண்டேன்

 

மத்திகிரி, 28-9-16, (29-9-16) இரவு 12.10