Tamil Songs 101-110

வாலாஜா பேட்டை மணி ஐயர், கொடைக்கானல் கூடுகைக்கு வர இயலாதது பற்றி எழுதிய போது, பதிலாக நான் எழுதிய கடிதம்:

 

101. பருப்பில்லாத கல்யாணம்

 

பருப்பில்லாத கல்யாணமாம்

மணி ஐயர் இல்லாத கூடுகையாம்

கேட்டதுண்டோ உலகினிலே

கேளீரோ இந்த வேடிக்கையை

உப்பில்லாத பத்தியம் உண்டு

உடல் நலம் இல்லாதவர்க்கு

உப்பே இல்லாமல் சாப்பிட்டால்

அதுவே நோயாகும் பிறகு

எனவே மணி இல்லாத கூடுகை

உப்பில்லாத உணவாகும், அதனால்

தப்பில்லாமல் கொடை வந்து

சுவையாக்க வேண்டும் கூடுகையை

 

30-04-1999. ஈரோடு.

 

மனித வாழ்வில் மட்டும் ஏன் இத்தகைய போராட்டம்? இதைப்பற்றி ஒரு வாலிபனுடன் பேசிய பிறகு எழுதிய பாடல்:

 

102.  எவ்வளவோ நமை

 

மிருகமாய் இருந்துவிட்டால்

எவ்வளவோ நன்மை

வேண்டாத போராட்டம்

பல இல்லாமல் வாழ

பகுத்தறிவு என ஒன்றை

பயனின்றி ஏன் தந்தான்

“பகுத்தே” அறிந்தபின்னும்

“வகுத்து” அதன்படி வாழாமல்

சிந்தை போன போக்கில்

சித்தமும் தான் போக

சுய புத்தியும் இழந்து

செய்வதறியாமல் தடுமாறும்

சிறுமையான இவ்வாழ்வில்

மிருகமாய் இருந்துவிட்டால்

எவ்வளவோ நன்மை

மேன்மையான் வாழ்க்கை

மேதினியில் நாம் வாழ.

20-06-1999. ராணிகேத் (உத்திரா காண்ட்)

 

 

எவ்வளவு கேள்விகள் வாழ்வில் இருந்தாலும், அவற்றுக்கு நிச்சயம் விடையும் உண்டு. ஆனால் நம் பிரச்சனை அந்த விடைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதுதான். இதைக்குறித்து சிந்தித்தபோது எழுதிய பாடல்:

 

103. தெளிவான வழி

 

விடையாக வாழ்க்கையில்

பலவேறு வழிகளை

வகையாகத் தேடினோம்

வேடிய வழிகளும்

கூறிய விடைகளைக்

கைக்கொள்ளத் தயங்கினோம்

தேடிய முறகளே

தெளிவாக இல்லாது

விடைகளை நாமடைந்தால்

போகின்ற வழியுமோ

பொழுது போக்காகி

ஊர்போக உதவிடாது

தேடுமுன் விடைகளை

தெளிவாக ஒன்றைநாம்

மனதினில் கொள்ளவேண்டும்

தெய்வத்தின் அருளொடு

தேர்ந்த வழியிலே

துணிந்தே செல்லவேண்டும்

10-01-2000. ஈரோடு.

 

இன்று மாலை மழை வந்தது. ஆனால் பலத்த காற்று வந்து சற்று நேரத்தில் அதைக் கலைத்தபோது எழுதிய பாடல்:

 

104. கூட்டணி சரி இல்லை

 

வானம் திறந்து நீ வாராயோ

வையம் குளிர உனைத் தாராயோ

வரண்ட நிலத்தையும் வாடிய பயிரையும்

வருடி அணைத்திட நீ வாராயோ?

 

இருண்டது வானம் இடித்தது மேகம்

மகிழ்ந்தது உள்ளம் உன் வரவை எண்ணி

ஆனால் கட்டியம் கூறிய காற்றோ சற்றும்

கருணை காட்ட மறுத்தது ஏனோ?

 

கோடையின் வெப்பம் தகித்திடும் போது

கொஞ்சமும் கருணை காட்டாத காற்று

உன் வரவைக் கூற வந்திடும் போது

விரைந்து உன்னை விரட்டுவது ஏனோ?

 

காறும் மழையும் கலந்தே என்றும்

கூட்டணி அமைப்பது சரியே இல்லை

தனித்தே வந்து அவை தந்திடும் சுகம்

அதை வர்ணிக்க வார்த்தை என்னிடமில்லை.

 

மத்திகிரி, 16-04-2004.

 

என் சீடர்களில் என்னை மிகவும் நேசித்து என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து கீழ்படியும் ஒரே சீடன் பிரசாத்தான். அவன் விபத்தில் இறந்தபின் அவனை எண்ணி எழுதிய பாடல்:

 

105. பிரசாத்

 

பிரிவினைத் துயரிலே தவிக்கவிட்டு

பிரியா விடைபெற்று சென்றுவிட்டான்

பெயரிலே கருணை கொண்டிருந்தும்*

செயலிலே ஏன் அதை மறந்துவிட்டான்

பிரியமுடன் மணந்த பிரியாவின் மீது

பிரியாத காதல் கொண்டிருந்தும்

பரிதபித்து அவள் தவித்திடவே

பிரிந்து செல்ல ஏன் துணிந்துவிட்டான்?

ஆர்வமுடன் ஈன்ற பிள்ளைகள் மன

ஏக்கத்தைல் வாழ்விட்டு எங்கு சென்றான்?

மடிமீது போட்டு வளர்த்த அன்னை

மனதினை துயரிலே மிதக்கவிட்டான்

நேசமாய்ப் பெற்ற தந்தை மனத்

துயரிலே என்றுமே இறக்கிவிட்டான்

பாசமாய் கூடவே வளர்ந்த தம்பி

பாரினில் தனியே தவிக்க விட்டான்

அன்புடன் அரவணைத்த சுற்றமெல்லாம்

என்றுமே எண்ணி புலம்ப விட்டான்

நாளெலாம் நட்பு பாராட்டிய

நண்பர்கள் மனம் திகைக்க விட்டான்

உபதேசம் அருளிய குருவும் கூட

ஓயாமல் எண்ணி புலம்ப விட்டான்

சென்றுவிட்டான் இனி செய்வோமினி

தெய்வமே உன்னிடம் வந்துவிட்டான்

“பிரசாத்” என்ற பெயருக்கேட்ப

பிரசாதமாய் உலகிலே வாழ்ந்துவிட்டான்

அவன் இட்ட வித்துகள் இனி

ஆல்போல் தழைத்து பலன் கொடுக்க

இறைவனே அருளுவாய் உன் பிரசாதம்

என்றுமே உன்புகழ் நிலைத்து நிற்க.

27-06-2006. மத்திகிரி.

*”பிரசாத்” என்ற சொல்லிற்கு கருணை, கிருபை என்ற அர்த்தம்.

 

106. துறந்த இல்லறம்-சிறந்த துறவறம்

 

இல்லறம் துறவறம்

இரண்டும் நல்லறம்

ஆயினும் இல்லறம்

அமைய சிறப்புடன்

வேண்டும் துறவறம்

சற்றே அவரிடம்

“நான்” என்ற

ஆணவம் துறந்து

“நமதே” என்ற

எண்ணம் அமைந்து

பிறர்க்கு உழைக்க

தன் “நலம்” பேணி

அனைவரும் வழ்வில்

அனைத்தும் பெற்றிட

மனதில் “துறந்து”

வாழ்வில் உயர்ந்து

ஒன்றாய்க் கூடி

இன்பம் துய்த்து

வாழ்ந்தால் இல்லறம்

என்றும் உயர்ந்திடும்

துறவறம் என்பதும்

துறப்பது அல்ல

துணிவாய் சில

தேவையை மறுத்து

பிறர்க்கு என்றே

வாழ்வைத் தந்து

உலகம் உய்ய

தவமே இருந்து

தன்னுள் தானே

நிறைவைக் கண்டு

தனித்தே வாழ்ந்து

தாழ்வுடன் இருந்து

அமைதி காப்பது

ஒன்றே துறவறம்

25-09-2011. குருகுலம்.

 

 

அந்தமானுக்குச் சென்றிருந்தபோது, மாயாபந்தரிலிருந்து, கதம்தலா வழியாக போர்ட் ப்ளேயருக்கு வந்திருந்த போது நிர்வாணமாய் வாழும் ஜெரவா இனமக்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களை நாகரீக மக்களாக்குகிறோம் என்றபெயரில் செய்யப்படும் செயல்கள் சரியல்ல என்பது என்கருத்து. அதைக்குறித்து சென்னைக்குச் மீண்டும் கப்பலில் திரும்பிகொண்டிருந்தபோது எழுதிய பாடல்:

 

107.        மெய் ஞானிகள்

 

“நிர்வாணம்” (முக்தி) அவர்க்குப் புதிதல்ல

நிர்வாணமாய் அவர் வாழ்வதினால்

“மெய்ஞானம்” அவர்க்குப் புதிரல்ல

“அஞ்ஞானம்” என்னவென்று அறியாததால்

வானமே கூறையாய் ஆனபின்னே

வாழ்வதற்கு அவர்க்கு வீடெதற்க்கு

காற்றே ஆடையாய் ஆனபின்னே

மாற்றுடை தேடும் மனம் எதற்கு

 

இயற்கையோடு இணைந்து வாழும்

“ஜெரவா” என்னும் மெய்ஞானிகள்

ஐயகோ ஆவார்கள் “அஞ்ஞானிகள்”

நம்முடன் தொடர்பு கொள்ளும்போது!

 

“நாகரீகம் தருகிறோம்” என்றெபெயரில்

நாம் செய்வதும் வீண் அஞ்ஞானமே

நம்மிடை வாழ அவர் வந்துவிட்டால்

நலன் ஏதும் பெறார் இதுதிண்ணமே!

 

இயற்கையுடன் வாழ அவரைவிடுங்கள்

இதுவே அவர்க்கு செய்யும் நன்மையாகும்

அவர்கேட்கவில்லை நம்வாழ்வை

ஆகவே செய்யாதீர் இவ்வநியாயம்

 

108   .     எது புதுமை

 

சிலகணம் சேர்ந்து

சிலகணம் பிரிந்து

மறுமணம் புரிந்து

மறுபடி பிரிந்து

வாழ்வதென்பது

வழக்கம் ஆனது

“புதுமை” கூறும்

சிலரது வாழ்வு

 

வாழ்வின் அர்த்தம்

அறியா வரையில்

வாழ்வின் நெறிகள்

புரியா வரையில்

எடுத்தேன் கவிழ்த்தேன்

என்பது போன்று

வாழ்வதல்ல

“புதுமை” என்பது!

 

வாழ்ந்து முடித்த

முன்னோர் வழியில்

வள்ளுவன் காட்டிய

வாழ்க்கை நெறியில்

பெற்றோர் வாழ்ந்த

புரிதலின் நிலையில்

தொடர்ந்து செல்வதும்

“புதுமை” ஆகும்!

25-09-2011. குருகுலம்.

 

109.       இரு முதியவர்

 

வடக்கில் ஓர் முதியவர்

விரதமிருந்தார்

ஊழலை எண்ணியே வருந்தி

தெற்கில் ஓர் முதியவர்

உள்ளே குமுறுரார்

ஊழலை செய்தே விரும்பி

“வடக்கு வாழ்கிறது

தெற்கு தேய்கிறது”

என்று இதைத்தான்

அன்றே சொன்னாரோ?

29-08-2011.

 

பல புதுக்கவிதைகள் நீண்ட வார்த்தைகளை மடித்துப் போட்டு அர்த்தமில்லாமல் இருக்கின்றது. அப்படி ஒரு கவிதையை, ஒரு மிகப்பெரும் சினிமாப் பாடலாசிரியர் எழுதிய புதுக்கவிதையை ஒரு புத்தகத்தில் படித்த உடன், அதுபோன்று ஒன்றை உடன் நான் எழுதினேன்:

 

 

110.  சமரசம்

 

நீ சொல்வதை

நான் கேட்க வேண்டும்

நான் சொல்வதை

நீ கேட்க வேண்டும்

இதுநம்மிடை ஏற்படும்

சமரசம் அல்ல

வாழ்வின் உண்மை

சாராசம்

2011.